முகவுரை

மலாயாப் பல்கலைக்கழக இந்திய ஆய்வியல் துறையின் வருடாந்திர வெளியீடு இந்திய ஆய்விதழ். இவ்வாய்விதழ் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் விரிவுரைஞர்கள் தங்களது படைப்புகளை வெளிப்படுத்த ஒரு வாய்ப்பளிக்கும் தடமாக அமைகின்றது. சிறந்த ஆய்வு மனப்பாங்கோடு உருவாக்கப்பட தரமிக்க கட்டுரைகளைத் தேர்ந்தெடுந்து பதிவுசெய்து, கல்வி உலகில் அவற்றைப் பதிவுசெய்யும் முயற்சிக்கு இவ்வாய்விதழ் வழிவகுத்துக் கொடுக்கின்றது. மலேசிய மண்ணிலும், பிற இடங்களிலும் இந்தியர், தமிழ், தமிழர், அவர்தம் வாழ்வியல் அமைப்பு, மாற்றம், எழுச்சி ஆகிய நுண்ணிய பார்வையினை வெளிக்கொணரும் நல்ல கட்டுரைகளைப் பிரசுரிப்பது இவ்வாய்விதலின் முதன்மை நோக்கமாகும். தேசிய மொழியான மலாய், ஆங்கிலம் மற்றும் தமிழ் மொழிகளில் எழுத்தப்பட்ட அத்தகைய தரமிக்க கட்டுரைகள் இவ்வாய்விதழில் பிரசுரிக்கப்படுகின்றன.

இந்திய ஆய்வியல் துறையின் கல்வி வளர்ச்சிப்பணியில் ஒரு மைல்கல் இந்திய ஆய்வியல் இதழ். கல்விமான்களும் துறையில் கல்விபயிலும் ஆய்வுமாணவச் செல்வங்களும், பிறரும் தமது சிந்தனைக்கருவில் உதித்த உயர்சிந்தனைகளைப் பிறரோடு பகிர்ந்துகொள்ள தற்போது தடம் வழங்கும் இடமிதுவாக அமைத்துக் கொண்டுள்ளது. சிந்தனைமடல்களில் மலர்ந்த அச்சிந்தனைக்கருக்கள் தம்மையும், தம் சமுதாயத்தையும், தம்தேசத்திற்கும் நன்மையைப் பயக்கும் வண்ணம் அமைந்திடுவது மிகைமுக்கியமாகிறது. இக்கருத்துகள் பொதுவில் இரு பணிகளைச் செய்யும்; ஒன்று, தமது கருத்துகளைப் பிறரோடு பகிந்துகொள்ள உதவுதல்; மற்றொன்று, தமது கருத்துகளைப் பதிவுசெய்து அடுத்த தலைமுறையினருக்குக் கொண்டுசெல்லுதல். இவ்விரண்டு செயல்களும் கல்வியுலகில் காலங்காலமாக நடந்துகொண்டு வருகின்றன. இம்முயற்சி தடைபடுமாயின், சமுதாயத்தின் வளர்ச்சியும் ஏதோ ஒரு வகையினில் தடைபடுவதாகவே பொருளாகும்.

இந்த இதழ் 7 ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டு மலர்ந்துள்ளது. இவ்விதழில் காணப்படும் 7 கட்டுரைகளும் 7 ஆய்வுப்புலங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளன. அந்த வரிசையில் நாகரிகம், பண்டைத் தமிழர் வணிகம், இலக்கணம், நவீன இலக்கியம், சோதிடம், சமயம் மற்றும் ஒப்பீட்டு இலக்கியம் என பல்வகைத் தலைப்புகளில் ஆய்வுக்கட்டுரைகள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிந்துவெளி நாகரிகம் ஓர் ஆய்வியல் அறிமுகம் எனும் கட்டுரையின் ஆசிரியர்கள் பேராசிரியர் முனைவர் மு.இராசேந்திரன் மற்றும் முனைவர் க.சில்லாழி ஆகியோர் சிந்துவெளி நாகரிகம் குறித்து விளக்கமாக விவரித்துள்ளனர். இக்கட்டுரை நாகரிகம்-பண்பாடு ஆகியவற்றிற்கு இடையில் உள்ள தொடர்புகளையும், நாகரிகமடைந்த மக்களிடையே காணக்கிடக்கும் சில முக்கியக் கூறுகளையும் விளக்கி, பொதுவில் சிந்துவெளி நாகரிகம் உலகின் சிறந்த சில தொல்நாகரிகங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது என்பதில் எவ்வித ஐயப்பாடும் இல்லை என உறுதிபடுத்தியுள்ளனர். சிந்துவெளி தொல்பொருள் ஆய்வு, தனது ஒட்டுமொத்தப் பங்களிப்பில், இந்திய நாகரிக வரலாற்றைச் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்தள்ளியது என்பதுதான் முதன்மையான பங்களிப்பாக இக்கட்டுரையில் வழங்கியுள்ளனர். இந்த நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் யார் எனும் கேள்விக்கான துள்ளியமான விடையை ஆய்வாளர்கள் இன்னமும் கண்டறியவில்லை. சிந்துவெளியின் எழுத்துகள் திருப்திகரமான முறையிலும், அனைத்துத் தொல்லியல் ஆய்வாளர்களும் ஏற்கும் வகையிலும் அமையாமல் போனது இவ்விசயத்தில் மிகப்பெரிய பின்னடைவாகக் கருதப்படுகிறது. இருப்பினும், சிந்துவெளி நாகரிகத்தைத் தோற்றுவித்தவர்கள் தொல்தமிழ்/திராவிட முன்னோர்கள்தாம் எனும் அனுமானம் பலவகையிலும் வலுப்பெற்று, தற்போது முதன்மை நிலையில் இருப்பது தெரிகிறது என விளக்கியுள்ளனர்.

இரண்டாம் கட்டுரையாக இடம்பெற்றிருக்கும், பண்டைத் தமிழரும் வாணிகமும் எனும் கட்டுரை முனைவர் இரா. கிருஷ்ணன் அவர்களால் படைக்கப்பட்டுள்ளது. மக்கள் வாழ்க்கைக்கு உணவு, உடை போன்றே பொன், வெள்ளி முதலிய செல்வமும் இன்றியமையாதவையாகும். ஒரு நாட்டின் நல்வாழ்விற்கு, பொருள் வளர்ச்சிக்கு அடிப்படையாக விளங்குவன உழவுத்தொழில், கைத்தொழில்கள், நில வழியும் நீர் வழியும் நடத்தப்பெறும் வணிகம் ஆகியன என்று பண்டைத் தமிழர்கள் நன்கு அறிந்து வைத்திருந்தனர்; ஆகையால்தான், நம் முன்னோர்கள் திரை கடல் ஓடியும் திரவியம் தேடு என்றனர் போலும் எனும் அடிப்படையில், இந்தக் கட்டுரை பண்டைய தமிழ் மக்களின் வணிகம், அவர்கள் பிற நாடுகளுடன் மேற்கொண்ட வாணிகம் முதலியவற்றைப் பற்றி ஆராய்கிறது என விளக்கியுள்ளார். பண்டைத் தமிழர் சமுதாயத்தில் வணிகர் உயர்ந்த இடத்தைப் பெற்றிருந்தது எனவும்  சங்ககால வாணிகம் தமிழர்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது எனவும், வணிகம் ஐவகை நிலங்களில் வெவ்வேறு தொழில்கள் நடைபெற்றதால் வாணிகமும் வேறுபட்டு இருப்பதைக் காண முடிகிறது எனக் கூறியுள்ளார். வணிகர்களால் தமிழகம் செல்வச் செழிப்புற்று விளங்கியது எனவும், இவர்கள் சான்றோர்கள் கூறியுள்ள அறநெறிகளிலிருந்து தவறாது, இல்லற நெறியிலும் பிறழாது  வாழ்ந்தனர். வெளிநாட்டினரோடு சிறப்பாக வாணிகம் செய்தனர் என விளக்கியுள்ளார்.

மூன்றாவது கட்டுரை, வினைச்சொற்கள் கற்றல்-கற்பிப்பதில் பின்னோக்குப் போதனைமுறை உத்தி எனும் தலைப்பினில் முனைவர் மோகன தாஸ் ராமசாமி அவர்களால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழ் இலக்கணக் கற்றல் கற்பித்தல் என்பது கடுமையான ஒன்று என்பது பலரது பார்வை. அதிலும் வினைச்சொற்களைக் கற்பிப்பது சற்றுக் கடினம். இந்தக் கடினத்துவம் மாணவரது மனதில் இருப்பினும், போதனையாளர்களின் மனதில் ஆழமாகவே உள்ளது. இலக்கணம் என்பது எட்டிக்காய் உண்பது எனும் எண்ணத்தில் பார்க்கும் ஒரு சில போதனையாளர்களின் பார்வை இப்பாடப் போதனையினை மேலும் சிரமமாக்குகின்றது. மலேசியா போன்ற நாடுகளில் தமிழ் மொழியினை இரண்டாம் மொழியாகக் கற்பிக்கப்படும் வேளையில், இதன் சிரமநிலை மேலும் பன்மடங்கு ஆகின்றது. போதிய ஆழ்நிலை இலக்கண ஆளுமையின்மையும் இந்நிலையினை மேலும் சிரமமாக்குகின்றது. இத்தகையச் சூழலில் தமிழ் இலக்கணத்தில் குறிப்பாக சிரமமான பிரிவாகக் கருதப்படும் வினைச்சொற்களை அறிமுகம் செய்து அவற்றின் இலக்கணக் குறிப்புகளை இலகுவாக விளக்கிடும் ஒரு முறைமையினை, குறிப்பாக உயர் இடைநிலை மாணவர்களுக்கு அறிமுகம் செய்யும் நோக்கினில் இக்கட்டுரை வடவமைக்கப்பட்டுள்ளது. வினைச்சொற்களை வேர், அடி, சொல், தொகை, தொடர் எனப் பிரித்துப் போதனை செய்யாது, எதிர்நிலை முறையில், பின்வடிவாக்க முறையினில் போதிப்பதை இம்முறைமை அறிமுகம் செய்கின்றது. இந்தப் புதுமை முயற்சி ஆசிரியர்களுக்குப் பேருதவியாக அமையும் என்பதில் ஐயமில்லை எனலாம்.

இணைப்பேராசிரியர் வே. சபாபதி அவர்களின் கைவண்ணத்தில் உருவாக்கப்பட்ட கட்டுரை,  தொன்னூறுகளுக்குப் பின் மலேசியத் தமிழ் நாவல்கள் (1990-2007) என்பதாகும். இக்கட்டுரை தொன்னூறுகளிலிருந்து இன்றுவரையில் மலேசியத் தமிழ் இலக்கியத்தில் நாவல் பற்றிய பொதுவான செய்திகளை விளக்குதல், தொன்னூறுகளுக்குப் பின் மலேசியத் தமிழ்நாவல் வளர்ச்சியில் காணப்படும் முக்கியத் திருப்புமுனைகள், கிரியா ஊக்கிகள், நிகழ்வுகள் ஆகியவற்றை அறிந்து விளக்குதல், தொன்னூறுகளுக்குப் பின் மலேசியத் தமிழ்நாவல் வளர்ச்சிக்கு அதிகமான பங்களிப்பினைச் செய்துள்ள நாவலாசிரியர்களை அடையாளங்கண்டு குறிப்பிடுதல், தொன்னூறுகளுக்குப் பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் வளர்ச்சியில் காணப்படும் நாவல், குறுநாவல் பற்றிய ஒருமைப்பாடு, வேறுபாடு ஆகியவற்றை விளக்குதல், தொன்னூறுகளுக்குப் பின் குறிப்பாக அண்மைய பத்தாண்டுகளில் (1997-2007) வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் உள்ளடக்கத்தின் முக்கியப் போக்குகளை அறிவதோடு அவற்றின் தரமும் திறமும் பற்றி விளக்குதல், தொன்னூறுகளுக்குப் பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் (1997-2007) உள்ளடக்கத்தில் காணப்படும் நிகழ்காலச் சமுதாயத்தின் சமகாலப் பிரச்சினைகளை அடையாளங்கண்டு விளக்குதல், மற்றும் தொன்னூறுகளுக்குப் பின் வெளிவந்த மலேசியத் தமிழ்நாவல்களின் (1997-2007) உள்ளடக்கத்தில் வெளிப்படும் மலேசிய மண்ணின் மணம், அடையாளங்கள், மலேசியத் தன்மைகள் ஆகியவற்றை அடையாளங்கண்டு வெளிப்படுத்துதல் ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது.

ஐந்தாவது கட்டுரையாக அமைந்திருக்கும், தமிழர் சமய வரலாறு: ஒரு பொதுப் பார்வை என்பது முனைவர் இரா. சீதா லட்சுமி அவர்களால் உருவாக்கப்பட்டது. தாம் பார்க்கின்ற உலகத்தை, இயற்கைக் கூறுகளைக் கண்டு மனிதன் அஞ்சி, வியந்து, அதன் அடிப்படையில் இயற்கையை மனிதன் வழிபடத் தொடங்கினான் என்றும், உலகின் எல்லா நாடுகளிலும் மனிதன் கண்டுணர்ந்த சமயநெறியின் தொடக்கம் இதுவாகவே இருந்தது. பின்னர், இச்சிந்தனை மரபுநெறி வழிபாடாக வளர்ச்சி பெற்றது. சான்றோர் பெருமக்களின் சிந்தனைத்திறத்தால் ஆகமநெறி சமயங்களாக அவை வளர்ச்சி கண்டன. அவ்வகையில், தொல்காப்பியர் காலம் தொடங்கி, பக்தி இயக்கக் காலம் வரையிலான தமிழர் சமயத் தோற்றம், புறச்சமய ஊடுருவல், பக்தி இயக்கத் தோற்றமும் அதன் வளர்ச்சியும் ஆகிய தமிழர் சமய வரலாறு குறித்த ஒரு பொதுப் பார்வையினைத் தொகுத்து வழங்குதலை அடிப்படை நோக்கமாகக் கொண்டு இந்த ஆய்வுக் கட்டுரையை உருவாக்கியுள்ளார்.

தொடர்வது இந்தியர்களின் சோதிடக்கலை: ஓர் அறிமுகம் என்பது கோவி. சிவபாலன் அவர்களது கட்டுரை. இக்கட்டுரை ஆசிரியர் இன்றைய காலக்கட்டத்தில் மக்களிடையே சோதிடத்தின் மீது எதிர்மறையான சிந்தனைப்போக்கு ஒருபுறம் இருந்தாலும், சோதிடர்களை நாடிப் பயன்பெறும் நோக்கமும் அக்கலையைப் பற்றி ஆராயவும் கற்றுத்தேறவும் மக்கள் காட்டுகின்ற முனைப்பும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. இவ்வாறு சோதிடக்கலையைக் கற்கவும் ஆராயவும் தலைப்படுவோருக்கு சோதிடக்கலையைப் பற்றியும் அதுசார்ந்த நம்பிக்கையைப் பற்றியும் ஒரு பொதுவான புரிதல் இருப்பது இன்றியமையாதது ஆகும். அந்த வகையில் இந்தியர்களின் சோதிடக்கலையைப்பற்றி அறிய விழைவோர்க்கு அக்கலையைப் பற்றிய பொது அறிமுகத்தைத் தருவதாக இக்கட்டுரை அமைகின்றது என விவரிக்கின்றார்.

நிறைவுக் கட்டுரையாக அமைந்திருக்கும், மரபுவழி அடையாளமும் வாழும் நாட்டின் அடையாளமும் எழுத்தாளர் கே. எஸ். மணியம் படைப்புகளில் அடையாளத் தேடல்கள் ஓர் ஆய்வு எனும் கட்டுரையினை, கட்டுரையாளர் விஜயலட்சுமி அவர்கள் உருவாக்கியுள்ளார். எழுத்தாளர் கே.எஸ். மணியத்தின் ஆங்கில மொழி சிறுகதைகள், நாவல்கள், நாடகங்கள் அனைத்து வகை இலக்கியப் பிரதிகளும் மலாயா/மலேசியாவின் புலம்பெயர் சமூகம் இதுவரை கடந்துவந்திருக்கும் பாதையையும் இனிச் செல்ல வேண்டிய இலக்கையும் அதற்கான வழிகளையும் மீளாய்வு செய்பவையாக இக்கட்டுரை அமைந்துள்ளது. ஒவ்வொரு சமூக உறுப்பினரும் தனது மரபுவழி அடையாளங்களையும் வாழும் நாட்டின் அடையாளங்களையும் ஒருங்கே அணைத்துக் கொள்வதன்வழி  பன்முகத் தன்மைகொண்ட ஒன்றைச் சமூகமாக உருவெடுக்க முடியும் எனும் பெரும் எதிர்பார்ப்பைக் கே.எஸ். மணியத்தின் படைப்புகள் முன்வைக்கின்றன. மலேசிய ஆங்கில இலக்கியச் சூழலில் முன்னோடியாகத் திகழும் கே.எஸ்.மணியத்தின்  படைப்புகளில் வெளிப்படும் தனிமனித, சமூக அடையாளத் தேடல்கள்; அதை நோக்கிய பயணங்களின் சுவடுகளை அடையாளங்கண்டு விளக்க இக்கட்டுரை முனைந்துள்ளது எனக் கூறலாம்.  இந்த 7 கட்டுரைகளும் இவ்விதழைச் சிறக்கச் செய்யும் மணிக்கட்டுரைகள் எனலாம்.

இந்திய ஆய்விதழ் புதிய உத்வேகத்துடன் வளர, இந்த 12-ஆவது ஆய்விதழ் தடம் அமைத்துள்ளது. தமிழ்ச் சிந்தனைகளுக்கும் இந்தியச் சிந்தனைகளுக்கும் இடமளிக்கும் வண்ணம் இவ்விதழ் தமிழ்-மலாய்-ஆங்கிலம் என மும்மொழிகளிலும் வெளிவந்து கொண்டிருக்கின்றது. தமிழர் மற்றும் இந்திய வம்சாவளியினர் என இருசாராரது மொழி, இலக்கியம், கலைகலாச்சாரம், சமயம், பண்பாடு, நாகரிகம், அரசியல், பொருளாதாரம், சமூகவியல், சித்தவைத்தியம், ஆயுர்வேதம் என எல்லைக்குட்பட்ட சிந்தனைகளையும், உலக நாகரிகங்கள் பிறவற்றுடன் இணைத்தும் ஆய்வுக்கட்டுரைகள் இவ்விதழ் பிரசுரிக்கும். தமிழரின் சிந்தனைச் சிறப்புகளையும் சித்தாந்தங்களின் சிறப்புகளையும் வெளியுலகிற்குக் காட்டும் வண்ணம் இவ்விதழில் இடம்பெறும் கட்டுரைகள் இருப்பதனையும் ஆற்றின் ஆய்வுத்தரமும் இனிவரும் காலங்களில் மிகுவாக உறுதிசெய்யப்படும்.

இக்காலப்பகுதியில் உலகெங்கும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ்-இந்திய சார்பு ஆய்வுகள் நடந்த வண்ணமாக உள்ளன; அவற்றையும் நம்மோடு இணைத்து வளர இவ்விதழ் வாய்ப்பளிக்கும். ஆசிய-ஐரோப்பியப் பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் தமிழ்-இந்தியத்துறை அறிஞர்களின் கருத்துகளையும் பதிவுசெய்யும் தடமாக உருமாற்றிட முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதன்வழி உலகெங்கும் நடைபெறும் தமிழ்த்தொடர்பான ஆய்வுகள் நடைபெறுவதற்கும் தமிழறிஞர்கள் கருத்துப்பரிமாற்றங்கள் செய்வதற்கும் நல்லதொரு களம் உருவாக்கப்பட்டுள்ளது எனப் பெருமைகொள்ளலாம். தமிழறிஞர்களிடையே ஆக்ககரமான கலந்துரையாடல் நடைபெறுவதற்கு இத்தடம் வலிமைசேர்க்கும் என்பது திண்ணம்.

இந்திய ஆய்வியல் துறையின் பாரம்பரியத்தில் இவ்விதழ் மிக முக்கியமானதாக கருதப்படுகின்றது. 1980-களில் முதல் இதழ் வெளியீடு கண்டது முதல் இன்றுவரை (37 ஆண்டுகள்) 10 இதழ்களே வெளிவந்துள்ளன. தடைகள் பலவற்றை உடைத்தெறிந்து, இவ்விதழ் 7 சிறப்புப்படைப்புகளை ஏந்தி வெளிவரும் ஓர் இதழாக அமைந்துள்ளது. இவ்விதழில் 7 ஆய்வுக்கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன; மொழி, இலக்கியம், சமயம், மொழியியல் எனப் பன்முக ஆய்வுப்படைப்புகளின் முக்கியக் கண்டுபிடிப்புகள் இவ்விதழின் மூலம் பதிவுசெய்யப்பட்டு, வெளியுலகிற்கு எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இந்திய ஆய்வியல் துறையில் ஆய்வுப்பாரம்பரியத்தில் பாதைநெறிகளையும் காட்டும் வண்ணம் அமைந்துள்ளது என்பதும் திண்ணம்.

இந்த ஆண்டுமுதல் இந்திய ஆய்விதழ் (2019) மின்னியல் ஆய்விதழாகவும் பதிவேற்றம் காண உள்ளது. இதன்வழி உலகெங்கங்கும் இருக்கும் தமிழ்-இந்திய ஆர்வலர்கள் இம்மடலினைப் பயன்படுத்தும் நிலைக்கு வாய்ப்புகள் உருவாகியுள்ளது. எனினும், கடந்த 10 ஆண்டுகளாகத் தடைபட்டு இருந்த இதன் வெளியீட்டுத் தடையினைக் களைந்து, கல்வியுலகில் புதிய பரிணாமத்தில் வளர மீண்டும் மலர்ந்த இவ்விதழின் இளமை எக்காரணத்திற்காகவும் என்றென்றும் இழக்காமல் காக்க எம் துறையினர் பெருஞ்சிரத்தையைச் செலுத்துவர் என எதிர்பார்க்கின்றேன்; நாம் வீழ்ந்தாலும் தமிழ் வளரவேண்டும் என்பதனைச் சொல்லினால் அல்லாமல் செயலில் பதித்துச் செயல்படுத்துவோமாக.

இவ்விதழில் வெளிப்படுத்தப்படும் கட்டுரைக் கருத்துகள் பதிப்பாசிரியர் குழுவின் கருத்துகளாகவோ இந்திய ஆய்வியல் துறையின் கருத்துகளாகவோ இருக்க வேண்டிய அவசியமில்லை. 

மலாயாப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மேற்பார்வையில் இயங்கும் நாட்டுக்கோட்டைச் செட்டியார் அறக்கட்டளை வாரியம் இவ்விதழ் வெளிவருவதற்கான மானியத்தினைக் கடந்த காலங்களில் வழங்கிச் சிறப்பித்துள்ளது. எனினும், அத்துணைமைச் செயல்பாடு கிடைக்கப் பெறாத நிலையில் இவ்வாய்விதலின் வெளியீடு தடைபெறா வண்ணம் மின்னிதழாக மறுபிரவாகம் பெற்றுள்ளது. இம்முயற்சி இவ்வாய்விதல் பரந்த தமிழ் உள்ளங்களைச் செவ்வனே சென்றடையுமென நம்புகின்றேன்.

 

இக்கன்,

முனைவர் மோகன தாஸ் ராமசாமி

தலைமைப் பதிப்பாசிரியர்

இந்திய ஆய்வியல் துறை

மலாயாப் பல்கலைக்கழகம்

ஜனவரி 2020.